போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து கிளம்பியது ஏர் இந்தியா சிறப்பு விமானம்!
உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் தாயகம் கிளம்பியுள்ளது
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனில் வசிக்கும் தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து, அதிகரித்து வரும் போர் பதற்ற சூழல் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தளர்வுகளை இந்தியா அனுமதித்தது. அதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 சிறப்பு விமானங்களை இயக்குவதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
அதன்படி, உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான க்யுவ் போரிஸ்பீல் விமான நிலையத்துக்கு, ஏர் இந்தியாவின் முதல் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது. சுமார் 200க்கும் அதிகமான பயணிகளுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ள ட்ரீம்லைனர் பி-787 வகை விமானம் AI-1947 இன்று காலை 7:40 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு உக்ரைனை அடைந்தது.இந்த நிலையில், உக்ரைனிலிருந்து தாயகம் திரும்ப விருப்பப்படுவோரை ஏற்றிக் கொண்டு அந்நாட்டில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் புறப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணியளவில் அந்த விமானம் டெல்லி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 242 பயணிகள் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, வருகிற 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேலும் 2 விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி
மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், தங்களை அழைத்துவந்த ஏஜென்ட்டுகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், இந்தியத் தூதரகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டரை பின்தொடர்ந்து தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம், உதவியும் கோரலாம் என இந்தியத் தூதரகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment