சட்டையை கிழித்துக் கொண்டு சென்ற ஸ்டாலின்: அண்ணாமலை பரபரப்பு!
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநரிடம் புகார் அளிக்க சென்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநருக்கும் திமுக தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது மாநில அரசுக்கு ஆளுநர் தேவையில்லை எனக் கூறும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநரிடம் புகார் அளிக்க சென்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பழநியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசு செயல் திறனற்ற அரசாக உள்ளது. இதற்கு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் தரமின்மை மற்றும் அதில் நடந்த ஊழலே சான்று. ஆனால் மத்திய பாஜக அரசு பழநி அருகேயுள்ள கிராம மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முறையாக சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளது.எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தடுப்பூசியை குறை கூறியது. அதேபோல் தற்போது மாநில அரசுக்கு கவர்னர் தேவையில்லை எனக் கூறும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டையை கிழித்துக் கொண்டு கவர்னரிடம் புகார் அளிக்க சென்றது.” என்றார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு மாநில முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பிரசாரத்திற்கு வரவில்லை என்று தெரிவித்த அண்ணாமலை, மக்களை சந்தித்தால் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனக் கருதி கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஸ்டாலின் ஓட்டு சேகரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக மாநில அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் 'நீட்' தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் குற்றப் பின்னணி உள்ளவர் என்று தற்போது கூறுகின்றனர். இது பொருத்தமானதாக இல்லை. நீட் தேர்வினால் கோடிக்கணக்கில் செலவழித்து பெறவேண்டிய மருத்துவ கல்லுாரி சீட் தற்போது ஏழை மாணவர்களுக்கும் சென்று சேர்கிறது என்றார்.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல திறக்கப்பட்டன. ஆனால் மோடி அரசு தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லுாரிகளை திறந்துள்ளது. மார்ச் 10 உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்குப் பின் திமுகவினர் டெல்லியில் மண்டியிடுவர் என்றும் அண்ணாமலை அப்போது பேசினார்.
No comments:
Post a Comment