ஆளுநரிடம் வம்பு செய்யும் திமுக; வெடிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி!
ஆளுநரிடம் திமுக வீண் வம்பு செய்வதாகவும், நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஜனநாயக பூர்வமாக நடந்திருப்பதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி வார்த்தைகளை வெடித்து சிதற வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு இரத்து குறித்த தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி விடப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சமூகநீதிக் கொம்பர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள், 1-ஆம் தேதியே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஏன் வாய்திறக்கவில்லை? என்று தெரியவில்லை.
இவர்களிடம் வெளிப்படைத் தன்மை உண்மையிலேயே இருந்திருக்குமேயானால், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த நீட் மசோதா குறித்து தமிழக மக்களுக்கு இவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதில் கூட ஆளுநர் ஜனநாயக பூர்வமாக நடந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வெளியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகியவற்றை ஆளுநர் அவசர கோலத்தில் பரிசீலனை செய்ய இயலாது.
திமுக தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆளுநரும் ஜனாதிபதியும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இவர்கள் கருதக்கூடாது.
அப்படி கருதுவார்களேயானால், 1974-ஆம் ஆண்டு இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்கள் ஆட்சியில் ‘மாநில சுயாட்சி’ குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் கதி என்ன? கடந்த 47 ஆண்டு காலத்தில் அதை நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி என்ன? என்பதை இவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
இனியாவது திமுக தன் இயலாமையை முழுமையாக ஒப்புக்கொண்டு தமிழகப் பாடத்திட்டத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களையும் அதை எதிர்கொள்ள தயார் செய்திடவேண்டும்
No comments:
Post a Comment