ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - வெளியானது புது தகவல்!
ஊக்கத்தொகை வழங்காதது ரேஷன் ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.ரேஷன் ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை தாங்களே 'பாக்கெட்' செய்தும், மற்ற பொருட்கள் ஒவ்வொன்றையும் சரிபார்த்தும், கார்டுதாரர்களிடம் வழங்கினர். இதனால், அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டது. இந்த பணிக்காக, 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குமாறு ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை கண்டுகொள்ளாத அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார் எழுந்ததும், ரேஷன் ஊழியர்களுக்கு கார்டுக்கு தலா, 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அறிவித்தது.இந்த தொகையை, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதை உறுதி செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியது. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதியுடன் பொங்கல் பரிசு வழங்கும் பணி முடிந்து விட்டது. ஆனால், இதுவரை ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான பணிகளை, கூட்டுறவு சங்கங்கள் துவக்காமல் தாமதம் செய்கின்றன. இது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
லாரிகளில் அனுப்பப்பட்ட கரும்பை இறக்கி வைக்கும் கூலியை, ஊழியர்கள் தங்கள் பணத்தில் தந்தனர். அதையும் அதிகாரிகள் தராத நிலையில், ஊக்கத்தொகையும் தர தாமதிக்கின்றனர். எனவே, கார்டுக்கு 50 காசு என்பதை, 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment