காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார்? வெளியான பரபரப்பு தகவல்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி, காஞ்சிபுரம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. இதே உற்சாகத்துடன் வரும் 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அக்கட்சி எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த வேட்பாளர்களை தேடிப் பிடித்து திமுக நிறுத்தியுள்ளது. மாநகராட்சி அந்தஸ்தை காஞ்சிபுரம் பெற்றுள்ளதால் மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெரும்பான்மை பெறும் கட்சியை சேர்ந்தவர்கள் முதல் மேயர் ஆகும் வாய்ப்பை பெறுவர்.அதுவும் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் தங்களுடைய மனைவி அல்லது மகளை மேயராக்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். அதிலும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக இருக்கும் என்பதால் போட்டி பலமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. எப்படியும் திமுக பெரும்பான்மை பெற்றுவிடும் என்ற அபரிமிதமான நம்பிக்கை நிலவி வருகிறது.
இதையொட்டி பல்வேறு கோஷ்டிகள் மேயர் பதவியை பிடிக்க திமுகவில் காய்களை நகர்த்தி வருகின்றன. அதில், மாவட்ட அவைத்தலைவர் சேகரின் மனைவி விமலாதேவி (2வது வார்டு), இளைஞரணி துணை அமைப்பாளர் சோபன் குமாரின் மனைவி சூர்யா (8வது வார்டு), நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகத்தின் மகள் சசிகலா (17வது வார்டு), இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி மகாலட்சுமி (9வது வார்டு),வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா (18வது வார்டு), தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசனின் மனைவி சாந்தி (32வது வார்டு) ஆகியோர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ரேஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆறு பேரில் ஒருவருக்கு தான் மேயராகும் வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், இவர்களுக்குள் பேரம் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அதாவது, உங்களுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்து தருகிறேன்.
எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தில் கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்யவும் தயாராக உள்ளனர். அதிலும் 25 பேரின் ஆதரவு கிடைத்து, ஒருவரின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு 5 கோடி ஸ்வீட் பாக்ஸ்களை வாரி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஏனெனில் காஞ்சிபுரம் மாநகராட்சியை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment