சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ-க்கு முன் ஜாமீன் கிடைக்குமா.?
அலைபேசியில் பெண்ணை ஆபாசமாக பேசியதாக சர்ச்சை வழக்கில் சிக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மான்ராஜின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரீட்டா எனும் பெண் பணம் செலவழித்துள்ளார். மான்ராஜ் வெற்றி பெற்ற பின்னர் தான் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவழித்த பணத்தை திருப்பி தருமாறு ரீட்டா கேட்டுள்ளார். மான்ராஜின் நண்பரான இன்னாசியம்மாள் மூலமாக பணத்தை திருப்பித் தருமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இதற்கிடையே மான்ராஜும், இன்னாசியம்மாளும் பேசிக் கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மான்ராஜ் ரீட்டாவை அவதூறாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசியது போல் பதிவாகி இருந்தது. இந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக நிலுவையில் உள்ள நிலையில் மான்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக விரோதிகள் சிலர் இந்த ஆடியோ பதிவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர். எம்எல்ஏ வாக இருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வழக்கானது எம்.எல்.ஏ, எம்.பி.கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment