பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? - அமித் ஷா கேள்வி!
பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? என, அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, 20 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக செயலாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.இந்நிலையில் இன்று, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா என்ற இடத்திற்கு, பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரோஸ்பூர் பகுதியில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. ஒரு நாட்டின் பிரதமர் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் போது முதல்வர் பாதுகாப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இவர் பஞ்சாப் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்?
முதல்வர் சரண்ஜித் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்திலிருந்து போதைப் பொருள் கடத்தி விற்போர் கூண்டோடு கைது செய்யப்படுவர்.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் மதமாற்றம் ஒரு முக்கிய பிரச்னை. சரண்ஜித் சிங் சன்னி அல்லது ஆம் ஆத்மி தலைமையிலான அரசு இந்த மதமாற்றங்களைத் தடுக்காது. இது போன்ற மதமாற்றங்களைத் தடுக்க ஒரே ஒரு கட்சி மட்டுமே உள்ளது அது, பாஜக. எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment