போச்சா... எல்லாமே கவரிங்காம்; கடலூர் மாநகராட்சியில் அதிமுக ஷாக்!
அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் கவரிங் மூக்குத்தி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 19) ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போதே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்ற விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதாவது, மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் வாக்குகளை கவரும் வண்ணம் வாக்காளர்கள் பலருக்கு ஒரு கிராம் மூக்குத்தி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு மற்ற கட்சி வேட்பாளர்கள் திகைத்து போயினர். ஒருவேளை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்களோ? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் 24வது வார்டிற்கு உட்பட்ட நபர் ஒருவர், தனக்கு அளிக்கப்பட்ட மூக்குத்தி உடன் நேரடியாக நகைக் கடைக்கு சென்றுள்ளார். எப்படியும் தங்க மூக்குத்தியாக தான் இருக்கும் என்ற கனவுகளுடன் சென்றுள்ளார். ஆனால் நகைக் கடை உரிமையாளர் கூறிய விஷயம் அந்த வாக்காளரை பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதாவது மூக்குத்தி வெறும் கவரிங் மட்டுமே என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
தனால் அந்த வாக்காளர் வார்டுக்குள் வந்து பொதுமக்கள் மத்தியில் கத்தி கூச்சல் போட்டதாக தெரிகிறது. உடனே மற்ற வாக்காளர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட மூக்குத்திகளுடன் நகைக் கடைக்கு படையெடுத்து சென்றனர். அங்கு அனைவரின் மூக்குத்தியும் கவரிங் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் அனைவரும் மிகுந்த கோபத்திற்கு ஆளாகினர்.
வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் மூக்குத்தி
விநியோகம் நேற்று நடைபெற்றுள்ளது. தேர்தலுக்கு ஒருநாள் கூட இல்லாத நிலையில், வாக்காளர்கள் மூக்குத்தியுடன் நகைக் கடைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே மூக்குத்திக்கு மயங்கி எப்படியும் தனக்கு தான் ஓட்டு போடுவர் என்று அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் நினைத்திருக்கிறார். ஆனால் களம் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது.எப்படி எல்லா கோபத்தையும் மக்கள் வாக்குப்பதிவில் வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் 24வது வார்டில் அதிமுகவிற்கு சரியான இடியாக இருக்கலாம் என்கின்றனர். அதிலும் தமிழ்ச்செல்வன் கடந்த 10 ஆண்டுகளாக நகர மன்ற உறுப்பினராக இருந்தவர். மக்கள் மத்தியில் நன்கு பரீட்சயம் ஆனவர். எனவே வேறு வழிகளை கையாண்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
No comments:
Post a Comment