கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலில் கேண்டீன்? அறநிலையத் துறை பதில் சொல்ல கோர்ட் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 7, 2022

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலில் கேண்டீன்? அறநிலையத் துறை பதில் சொல்ல கோர்ட் உத்தரவு!

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலில் கேண்டீன்? அறநிலையத் துறை பதில் சொல்ல கோர்ட் உத்தரவு!


புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பான மனுவில், 'தொல்லியல் துறை சார்பில் இந்த கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விளக்கம் கேட்டும், அதற்கு தொல்லியல் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும், ஆன்மீக நடவடிக்கையாக இல்லாமல், வர்த்தக நடவடிக்கையான இந்த வசதிகளை கோவிலுக்கு வெளியில் செய்து கொடுக்கலாம் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதைப் போன்றது என்பதால், கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் எனவும், புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும்' என்றும் பாலகுரு தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டுமானங்கள், புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க, மத்திய தொல்லியல் துறைக்கும், இந்து சமய அறநிலைய துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad