ஹிஜாப் தடை.. இஸ்லாமிய மாணவிகளுக்கு நெருக்கடி.. கர்நாடகத்தில் என்ன நடக்கிறது?
கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஏற்கெனவே சில புகார்கள் எழுந்தன. ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்களால் முகத்தில் அணிந்துகொள்ளப்படும் துணியாகும்.
இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தில் குந்தபூரில் உள்ள அரசு கல்லூரியில் மீண்டும் ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சுமார் 40 மாணவிகள் இன்று கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக இன்றுடன் இரண்டு தினங்களாக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அனைவருமே 18 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவிகள். கல்லூரி விதிகளில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தும் கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து தர்மபுரி எம்.பி செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தார். கல்லூரி விதிமுறையில், மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியலாம் எனவும், துப்பட்டாவின் நிறத்திலேயே ஹிஜாப் இருக்க வேண்டும் எனவும் அனுமதி உள்ளது.
எனினும், கல்லூரி முதல்வரான நாராயண் ஷெட்டி, தான் ஒரு அரசு ஊழியர் எனவும், அரசின் விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், காவி துண்டு அணிந்துகொண்டு சில மாணவர்கள் காத்திருப்பதாகவும், மதத்தின் பேரில் அமைதி சீர்குலைந்தால் முதல்வர்தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment