IND vs WI: ‘அணிக்கு திரும்பிய ஷிகர் தவன்’…வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித்துக்கு செம்ம ‘தலைவலி’!
ஷிகர் தவன் கொரோனாவிலிருந்து மீண்டு, பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்க இந்திய அணியினர் தனிமை முகாமில் இருந்தபோது ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
இதனால், முதல் ஒருநாள் போட்டியின்போது ஓபனரான இஷான் கிஷன் இருந்தார். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல்தான் இருந்தது. கடந்த 6ஆம் தேதி துவங்கிய இப்போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது, இன்று இரண்டாவது போட்டி துவங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணியில், முதலில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார். இதனால், இஷான் கிஷனுக்குப் பதிலாக இவர்தான் ஓபனராக இருப்பார் எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது ஷிகர் தவனும், ஷ்ரேயஸ் ஐயரும் கொரோனாவில் இருந்து மீண்டு, அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், லெவன் அணித் தேர்வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓபனருக்கான இடம்தான் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.தவன்தான் ஓபனர்?
இந்நிலையில் ஷிகர் தவன்தான் ஓபனராக இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். காரணம் இஷான் கிஷன் தவனுக்கு மாற்று வீரராகத்தான் சேர்க்கப்பட்டார். தற்போது தவன் வந்துவிட்டதால், மாற்று வீரர் பெஞ்சில்தான் அமர்ந்தாக வேண்டும். அதேபோல், அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இப்போதிருந்தே தயாராகி வருவதால், கே.எல்.ராகுலை மிடில் வரிசையில் களமிறக்கி பார்க்க வேண்டும் என நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராகுல், ரிஷப் பந்திற்கு மாற்றாக கூட களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ராகுலின் இடம்:
காரணம், ராகுல் ஓபனராக 46 சராசரி மட்டுமே வைத்திருக்கும் நிலையில், 5ஆவது இடத்தில் களமிறங்கி 56.52 சராசரி வைத்திருக்கிறார். இதனால்தான், தொடர்ந்து சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடாமல், எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியாமல் தொடர்ந்து படுமட்டமான ஷாட்டை ஆடி அவுட் ஆகி வரும் ரிஷப்புக்கு மாற்றாக ராகுலை களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த மாற்றத்தை அவ்வளவு சீக்கிரமாகச் செய்துவிட முடியாது. இதனால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது, யாரை பெஞ்சில் அமர வைப்பது என்ற முடிவை எடுப்பதற்கு ரோஹித் நிச்சயம் சிரமப்படுவார் எனக் கருதப்படுகிறது. இதனால், இரண்டாவது போட்டிக்கான லெவன் அணி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment