தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நடந்துள்ள பாலியல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 26 ஆம் தேதி தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல் வெளி வந்தது. தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் 56 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் ஒரு வார காலமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வகுப்பறையில் தனியாக அழைத்து சில்மிஷம் செய்ததாகவும், சிறுமியின் வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன சிறுமி, ஆசிரியரின் விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்காமல், வேறு பள்ளியில் என்னை சேர்த்து விடுங்கள் என கெஞ்சியிருக்கிறார். ஆனால், பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. பள்ளிக்கு சென்றாலும் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை. இந்நிலையில்தான் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றார். மாணவியின் தற்கொலை முயற்சிக்கு பின்னர்தான் இந்த விவகார வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த திருவலம் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதேபோல, திருவள்ளூரில் கடந்த மார்ச் மாதம், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 102 வயதான, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்ற பரசுராமன் (102) கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 99 வயது. இந்த நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பரசுராமனுக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் எளிய சிறைத் தண்டனை என அறிவிக்கப்பட்டு அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment