ரஷ்யஅதிபர் புடினுடன் போனில் பேசி உக்ரைன் மீதான போரை நிறுத்த அந்த நாட்டு அமைச்சர் கோரிக்கை.
இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவை வலியுறுத்தி இந்தப் போரை கைவிடச் செய்ய வேண்டும் என்று உக்ரைன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் கோரியுள்ளது.
இதுதொடர்பாக என்டிடிவி நிறுவனத்துக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு அறிவுரை கூற வேண்டும். இந்தப் போரை நிறுத்த வேண்டும். போர் தொடங்கி 2 மாதத்தைத் தொட்டுள்ளது. பல ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன. பல லட்சம் பேர் நாட்டை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியா இந்த பிரச்சினையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தால் நாங்கள் அதை வரவேற்போம். பிரதமர் நரேந்திர மோடி, இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பேசினால் அதை வரவேற்போம்.
இந்திய உணவுப் பொருட்களை உக்ரைன் அதிக அளவில் பயன்படுத்துகிறது. இந்திய உணவு பாதுகாப்பானது. எங்களிடமிருந்து சூரியகாந்தி எண்ணெய், தானியங்கள், பிற பொருட்களை இந்தியா பெறுகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லுறவைப் பேணி வருகின்றன. எனவே ரஷ்யாவுடன் தனக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா முன்வர வேண்டும். ரஷ்யாவைப் பொறுத்தவரை முடிவெடுக்கும் ஒரே நபர் புடின்தான். எனவே அவருடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச வேண்டும்.
ரஷ்யாவின் போரை நாங்கள் விரும்பவில்லை. இது திணிக்கப்பட்ட யுத்தம். இந்தப் போரிலிருந்து எங்களது மண்ணையும், மக்களையும் காக்கவே நாங்கள் பதில் போர் புரிகிறோம். இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment