"வீட்டுக்குப் போனா பொண்டாட்டி திட்டுவா சார்".. 14 வருஷமாக ஏர்போர்ட்டிலேயே வசிக்கும் நபர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

"வீட்டுக்குப் போனா பொண்டாட்டி திட்டுவா சார்".. 14 வருஷமாக ஏர்போர்ட்டிலேயே வசிக்கும் நபர்!

மனைவிக்குப் பயந்து ஒரு மனிதர் விமான நிலையத்திலேயே கடந்த 14 வருடமாக வசித்து வருகிறார். நம்ப முடியவில்லை இல்லையா.. ஆனால் அதுதான் நிசம்.. நீங்க நம்பித்தான் ஆகணும்.
இந்த நபர் வசிப்பது சீனாவின் பெய்ஜிங் நகரில். இவரது பெயர் வெய் ஜியாங்குவா. இவருக்கு தற்போது 60 வயது நெருங்குகிறது. கடந்த 15 வருடமாக அதாவது 2008ம் ஆண்டிலிருந்து இந்த நபர் பெய்ஜசிங் சர்வதேச விமான நிலையத்தின் 2வது டெர்மினல் பகுதியில் வசித்து வருகிறார். வீட்டுக்கே போகவில்லையாம்.

45 வயது இருந்தபோது விமான நிலையத்துக்கு வந்தவர்தான். அன்று முதல் இங்குதான் வசித்து வருகிறார். அரசு கொடுத்து உதவிப் பணத்தை வைத்துக் கொண்டு சாப்பாட்டைக் கவனித்துக் கொள்கிறார். தூங்குவது, குளிப்பது எல்லாமே விமான நிலையத்தில்தானாம். வெய்யின் கதை குறித்து அறிந்த சீன செய்தி நிறுவனம் ஒன்று அவரை அணுகி பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் பேட்டியில் தனது சோகக் கதையை விவரித்துள்ளார் வெய்.

"எனக்கு 45 வயது ஆனபோது எனது வேலை போய் விட்டது. நான் பல இடங்களிலும் வேலை தேடினேன். எனது அதிக வயது காரணமாக வேலை கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் உள்ளது. அதை விட்டு விடுமாறு எனது மனைவி கண்டிப்பாக கூறி விட்டார். ஆனால் அது முடியாத காரியம்.

அரசு எனக்கு 1000 யுவான் (அதாவது 150 டாலர்) நிதியுதவியை செய்கிறது. இந்தப் பணத்தை அப்படியே என்னிடம் வந்து கொடுத்து விட வேண்டும் என்று எனது மனைவி கண்டிப்பாக கூறி விட்டார். ஆனால் மொத்தப் பணத்தையும் அவளிடம் கொடுத்து விட்டால் பிறகு நான் எப்படி சிகரெட் வாங்க முடியும்.. மது வாங்க முடியும். அதனால்தான் விமான நிலையத்திற்கே குடிபெயர்ந்து வந்து விட்டேன்.
தினசரி காலை அருகில் உள்ள மார்க்கெட்டுக்குச் செல்வேன். அங்கு 6 பன்றிக் கறி பன்களையும், கொஞ்சம் கஞ்சியையும் வாங்கிக் கொள்வேன். அதுதான் பிரேக்பாஸ்ட். பிறகு மதியத்திற்கு சாப்பாடு வாங்கிக்குவேன். கூடவே ஒரு பாட்டல் மதுவும் வாங்குவேன். இதை வைத்து எனது ஒரு நாளை ஓட்டி விடுவேன். இப்படியேதான் கடந்த 15 வருடமாக வாழ்ந்து வருகிறேன்.

என்னால் வீட்டுக்குப் போக முடியாது. அங்கு எனக்கு சுதந்திரமே இல்லை. எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு போடுகிறார் எனது மனைவி. எப்படி சார் நிம்மதியாக வாழ முடியும். எனக்கு எப்போது விடியும், எப்போது இரவு வரும், என்ன நேரம் இப்போது என்று எதுவுமே தெரியாது. பயணிகள் குறைய ஆரம்பித்தால் அது தூங்கப் போக வேண்டிய நேரம், பயணிகள் சத்தம் அதிகமாக கேட்டால் விடிந்து விட்டது என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன் என்றார் வெய்.

கடந்த 2017ம் ஆண்டு விமான நிலைய அதிகாரிகள் இவரை அணுகி, வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளனர். ஆனால் வெய் மறுக்கவே, போலீஸுக்குத் தகவல் தந்து அவர்கள் வெய்யை கட்டாயப்படுத்தி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுள்ளனர். ஆனால் விட்ட வேகத்திலேயே விமான நிலையத்துக்கு வந்து விட்டார் வெய். எத்தனை தடவை வெளியேற்றினாலும் இங்கேயேதான் திரும்ப வருவேன் என்று வெய் பிடிவாதமாக கூறி விடவே, அதிகாரிகளும் போய்த் தொலையட்டும் என்று விட்டு விட்டனர்.
"எனக்கு விமான நிலையத்தில்தான் நிம்மதி இருக்கிறது, சுதந்திரம் இருக்கிறது சார்" என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்கிறார் வெய்.. அவ்வளவு "கொடுமைக்கார மனைவியா சார்" உங்களுக்கு என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.. கேட்டால் நமக்கு வீட்டில் சோறு கிடைக்காதே.. !!

No comments:

Post a Comment

Post Top Ad