எல்லையில் வீரர்களை மாற்றும் சீனா: 15ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 8, 2022

எல்லையில் வீரர்களை மாற்றும் சீனா: 15ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்!

இந்தியா சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

இந்திய - சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. அத்துடன், லடாக் இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்திய - சீன எல்லையில் மீண்டும் அமைதியற்ற தன்மை நிலவி வருகிறது.

இதனிடையே, இரு தரப்புக்கும் இடையே தளபதிகள் மட்டத்தில் இதுவரை 14 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் காரணமாக, பான்காங் சோ, கல்வான் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகள் வாபஸ் பெறுவது உள்ளிட்ட விஷயங்களில் தீர்வு காண இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தியா மற்றும் சீனா இடையேயான தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11ஆம் தேதி நடைபெறும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்காக இந்திய தரப்பிலுள்ள சுஷூல் மோல்டோ முனை பகுதி சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
சர்ச்சைக்குரிய பகுதிகளில் தீர்வு காண இரு நாட்டு ராணுவமும் கவனம் செலுத்த உள்ளன. ஒரு அதன் ஒரு பகுதியாக, ஏற்று கொள்ள கூடிய தீர்வு ஏற்படுவதற்காக இரு நாட்டு தரப்பிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் ஊக்கமளிக்கின்றன என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, வீரர்களிடையேயான மோதலில் சீன தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு அரசு முதலில் தெரிவித்தது. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், சீனா தெரிவித்த தகவலில் சந்தேகம் உள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்ததற்கிடையே, இந்திய - சீன வீரர்கள் இடையேயான தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனமான The Klaxon அண்மையில் தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல், கடும் குளிர் மற்றும் மோசமான வானிலை காரணமாக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 50ஆயிரம் சீன வீரர்களின் எண்ணற்றோருக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிராக குவிக்கப்பட்ட சீன வீரர்களில் 90 சதவீதம் பேர் மாற்றப்பட்டுள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களை சுழற்சி முறையில் சீன ராணுவம் மாற்றி வருவதாக தெரிவிக்கும் அந்த தகவல்கள், இந்திய தரப்பிலும் வீரர்கள் சுழற்சி முறையில் அவ்வப்போது மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad