யாரும் என் கண்ணுல இருந்து தப்ப முடியாது: பைனாக்குலருடன் வலம் வரும் வேட்பாளர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 8, 2022

யாரும் என் கண்ணுல இருந்து தப்ப முடியாது: பைனாக்குலருடன் வலம் வரும் வேட்பாளர்!

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தை "பைனாகுலர் " கொண்டு வேட்பாளர் ஒருவர் கண்காணித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மொத்தம் 403 தொகுதிகளை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்கள் சிசிடிவி கேமிராக்கள் கொண்டு கண்காணிக்கப்படுகின்றன. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தை "பைனாகுலர் " கொண்டு வேட்பாளர் ஒருவர் கண்காணித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் ஹஸ்தினாபுர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. இவர் தனது தொகுதியில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு இன்று தனது காரில் சென்றார். அதன்பின்னர் அந்த திறந்தவெளி காரில் இருந்தவாறே, தான் வைத்திருந்த பைனாகுலரை கொண்டு அந்த இடம் முழுவதும் சுற்றிவந்து கண்காணித்தார். வாக்குச்சாவடி மையம் சிசிடிவி கேமிரா கொண்டு கண்காணிக்கப்படும் நிலையில், பைனாகுலரை கொண்டு வேட்பாளர் கண்காணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு உள்ளது. அதேசமயம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும், சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad