பச்சிளம் குழந்தை காயமடைந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனைக்கு 2 கெடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த புதன்கிழமை முத்துலட்சுமியை உறவினர்கள் மீட்டு பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு மறுநாள் முத்துலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து தாய் மற்றும் குழந்தை அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக மருத்துவமனையின் கட்டில் உடைந்து விழுந்துள்ளது.
இதனால் கட்டிலில் இருந்த குழந்தையும், தாயும் கீழே விழுந்துள்ளனர். இதில் குழந்தைக்கு தலையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையின் சார்பில் குழந்தையை மீட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் தங்களது குழந்தையை தூக்கிக்கொண்டு சொந்த முயற்சியில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எக்கோ இயந்திரத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
விருதுநகர் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்தபோது கட்டில் உடைந்ததால் பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு காயம் ஏற்பட்ட விவகாரத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட விசாரனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் விசாரணை முடிந்து 2 நாட்களில் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. மேலும், விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மருத்துவமனையில் பழுதான கட்டில்களுக்கு பதிலாக விரைவில் புதிய கட்டில்கள் மாற்றப்படும். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி கூறினார்.
No comments:
Post a Comment