முடிவுக்கு வருமா யுத்தம்? உக்ரைன் - ரஷ்யா 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

முடிவுக்கு வருமா யுத்தம்? உக்ரைன் - ரஷ்யா 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

உக்ரைன் - ரஷ்யா இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.
அதன்பலனாக, உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 3ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கானொலி மூலமாக இரு நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள ரஷ்ய பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு கூட்டு நிலைப்பாட்டை எட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 18ஆவது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே, உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும் என்று நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “எங்கள் வான்வெளியை நீங்கள் மூடவில்லை என்றால், ரஷ்ய ராக்கெட்டுகள் உங்கள் பிரதேசத்தில், அதாவது நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு அதிக நேரம் ஆகாது.” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகே உள்ள யாவோரிவ் ராணுவ பயிற்சி மையத்தில் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் தொடர்ச்சியாக, தங்கள் வான்வெளியை மூட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 596 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 1,067 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதில், 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 57 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad