ஏப்ரல் 5 வரை ஊரடங்கை அறிவித்து பிரதமர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தீவு நாடான சமோவாவில், அண்மையில், பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று இல்லாத நாடாக இருந்த சமோவாவில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அந்நாட்டின் பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சமோவாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து, பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 23, 26, 29, ஏப்ரல் மாதம் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும், குறிப்பிட்ட நேரங்களில் தேவையான பொருட்களை பொது மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment