9 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை சீன அரசு கடைபிடித்து வருவதால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விடுகிறது. சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்கு முழு ஊரடங்கை பிறப்பித்து சீன அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் மற்றொரு பெரிய நகரமான, ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து, இன்று முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்கு, இரண்டு கட்டங்களாக, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக, பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஷாங்காய் நகரில் மட்டும், 3,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது, சீனாவில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா தினசரி பாதிப்பில், 70 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment