கோவை: பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் பிரிக்க முயற்சிப்பதாகவும், கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு.
கோவையில் காதல் திருமணம் (சாதி மறுப்பு) செய்து கொண்ட ஜோடியை பெண்ணின் பெற்றோர் கடத்தி கொலை செய்ய முயற்சிப்பதாக இளம் ஜோடி சிக்னலில் இறங்கி கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் (22). இவரும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்பவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
அதனையடுத்து பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து இருதரப்பையும் சமாதானப்படுத்திய போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஷ்வர் மற்றும் அவரது மனைவி சினேகா இருவரும் நேற்று, ஸ்நேகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதாகக் கூறிய சினேகாவின் பெற்றோர் அவர்களை காரில் அழைத்துக் கொண்டு அவினாசி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்நேகா தரப்பு விக்னேஷ்வர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் பயந்து போன காதல் ஜோடி அலறி அடித்துக் கொண்டு காரில் இருந்து வெளியே வந்தனர். அவர்களின் கதறல் சத்தத்தை கேட்ட வாகன ஓட்டிகள் பலரும் அங்கு குவிந்ததால் அவர்களிடம் விக்னேஷ்வரும், சினேகாவும் தங்களை காப்பாற்றுமாறு நாடினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், காரில் இருந்த சினேகாவின் பெற்றோரிடம் விசாரித்தபோது, ' நாங்கள் கோயிலுக்கு தான் சென்று கொண்டிருந்தோம், அவர்களாகவே பயந்து காரை விட்டு கீழே இறங்கி விட்டனர்' என்று போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால், காதல் ஜோடியோ அதனை கடுமையாக மறுத்ததுடன், காருக்குள் சோதனையிடுங்கள், அவர்களிடம் கத்தி உள்ளது என்று போலீசாரிடம் கூறினர். கோவையில் நேற்றிரவு காதல் ஜோடிகள் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment