நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பொதுநோக்குடன் செயல்பட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 சிறார்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக மருத்துவக் குழுவுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 225 கோடி செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. மருத்துவ செலவுகளுக்கு அஞ்சும் தயக்கத்தை மக்கள் மத்தியில் போக்க வேண்டும்.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இன்று நீட் எழுதாமல் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெற இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் தமிழகம் வந்து கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் மருத்துவக் கல்வி படிக்கக்கூடிய உரிமை இருக்கிறது. அதனை நீட் தேர்வின் மூலம் தடுக்கக் கூடாது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ள தீர்மானத்தின் மீது ஆளுநர் தனது சுயகாரணம் வழிமுறைகள் ஆகியவற்றை நீக்கி வைத்துவிட்டு பொதுநோக்குடன் செயல்பட வேண்டும்.
அனைவருக்கும் சமூக நீதி என்பதை பின்பற்றி செயல்படுவதே நல்ல அரசாக இருக்கும். அவ்வாறு செயல்படாதபட்சத்தில் அது நல்ல அரசு அல்ல என்று ஒன்றிய அரசை கனிமொழி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment