உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேஎற்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும்; உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் பெஸ்கோவ், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த இருதரப்பு ஒப்புதலை பெற வேண்டும். இதுவரை அதுபோன்று எந்த ஒப்புதலையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ளதால், அதனை ரஷ்யாவால் சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment