உளவுத்துறைக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என, உளவுப் பிரிவு போலீசாருக்கு, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
உளவுப் பிரிவு போலீசார் தங்களை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், ரவுடிகள், சமூக விரோதிகளின் நடமாட்டம், பிற நாட்டினரின் சட்ட விரோத ஊடுருவல் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் சட்டம் - ஒழுங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர். இதன் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறும் முன்னரே, தடுத்து நிறுத்தப்படும்.0
இந்நிலையில், சமீபக் காலமாக புலனாய்வுப் பணியில் உளவுப் பிரிவு போலீசார் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, நிகழ்ச்சி அல்லது குற்றச் சம்பவம் நடைபெற்ற பின்னரே, அது குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடந்து முடிந்த நிகழ்வுகள், சம்பவங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதைக் குறைத்துக் கொண்டு, அது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னரே அது தொடர்பான தகவல்களை திரட்ட முயற்சி செய்யுமாறு உளவுப் பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் திட்டங்கள், காவல் துறையின் செயல்பாடுகள் காரணமாக, பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மனநிலை மற்றும் மகிழ்ச்சி, விரக்தி, ஏமாற்றம், எதிர்பார்ப்பு உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி, உளவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
ஜாதி மோதல்கள், இரு தரப்பினரிடையிலான பிரச்னைகள், ரவுடிகளின் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை நிகழாதபடி, முன்னரே தகவல்களைத் திரட்டுமாறும் உளவுப் பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் திறமையான, துடிப்பான காவல் கண்காணிப்பாளர்களை, மாவட்டங்களில் நியமிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், எதிர்பார்த்த அளவுக்கு பணியை மேற்கொள்ளாதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் துடிப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment