தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிற்க வைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வட்டார கல்வி அலுவலர்களாக நேரடி பணி நியமனம் பெற்ற 95 நபர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களையும் படித்தறிய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமே சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
பெற்றோரின் விருப்ப அடிப்படையிலேயே சாதி பதிவு செய்யப்படுகிறது. சான்றிதழில் சாதியை குறிப்பிட விருப்பமில்லை என்று பதிவிடுவதற்கான வசதியும் உள்ளது. 'எமிஸ்' தளத்தில் மாணவர்களின் சாதி விவரம் வராத வகையில் BC - MBC என்பது போல 'சாதியின் பிரிவு ' மட்டுமே வரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பணம் கட்டாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிறுத்த கூடாது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மறு தேர்வு இன்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என போராடி வருவது சங்கடமாக உள்ளது. நாளை இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உள்ளிட்டோர் பேச உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment