மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளாரை திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு சந்தித்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர் ஒரு சேரிலும், ஜீயர் ஒரு சோபாவிலும் அமர்ந்து உரையாடினர். இதை சிலர் சர்ச்சையாக்கினர். சிலர் கொண்டாடினர். ஜீயருக்கு நிகராக அமர்ந்து பேசி சமூக நீதியை சேகர் பாபு கட்டிக்காத்துள்ளார் எனவும், ஜீயரை கோட்டைக்கு வரச் சொல்லி பார்க்காமல் நேரில் சென்று அமைச்சர் சந்தித்தது ஏன் எனவும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு, “மனிதனை மனிதனாக நடத்தும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின், மனிதனை மனிதானவே நடத்ததும்படி அறிவுறுத்தி உள்ளார். வேலையில்லாத சிலர் இதுபோன்று பேசி வருகின்றனர்.” என்றார்.
இந்த நிலையில், இதுபோன்று சாமியார் சர்ச்சை ஒன்றில் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு சிக்கியுள்ளார். மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளாரை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்ததாக புகைப்படம் ஒன்று இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில், பங்காரு அடிகளார் சேரில் அமர்ந்துள்ளார். அந்த அறையில் சோபா இருந்தும் அமைச்சர் கே.என்.நேரு அதில் அமராமல், தரையில் அமர்ந்துள்ளது போன்று உள்ளது.
திமுக என்றாலே சுயமரியாதையை பேசும் கட்சி என்றும், சமூக நீதியை பின்பற்றும் கட்சி என்றும் கூறப்படும் நிலையில், மூத்த அமைச்சரே இதுபோன்று தரையில் அமர்ந்ததாக புகைப்படம் வெளியானதால் அது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த புகைப்படம் எதிர்க்கட்சியினர், திமுகவை விமர்சிப்பவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல உள்ள நிலையில், சொந்தக்கட்சி எம்.பி.யே அமைச்சர் நேருவை விமர்சித்துள்ளார்.
திமுக எம்.பி., செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம். பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன. அதில், அமைச்சர் நேரு சோபாவில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவரது வேட்டியில் திமுக கரை இல்லை. மற்றொரு படத்தில் சோபாவில் யாருமே இல்லை - பங்காரு அடிகளாரை சுற்றி இருப்பவர்கள் சால்வையை பிரிப்பது போன்றும் உள்ளது. அதில் கமெண்ட் செய்திருக்கும் ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கும் நேருவின் காலையே காணோம்; ஆவியாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்று சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் சர்ச்சையுடன் சேர்ந்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment