தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த காட்பாடி மாணவியை பலாத்காரம் செய்த காப்பக உரிமையாளரின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பெற்றோரை இழந்த இவர் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தனியார் காப்பகத்தை நடத்தி வந்தவரின் மகன் கார்த்திக், இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், காப்பகத்தை கண்காணிப்பதாக கூறி கார்த்திக் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது காட்பாடி மாணவியின் மீது அவரது பார்வை விழுந்தது. காப்பகத்திற்கு வரும் கார்த்திக் மாணவியிடம் அடிக்கடி பேச்சு கொடுத்தார். அவரை நம்பிய மாணவியும் பேசத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், கார்த்திக் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூற ஆரம்பித்துள்ளார். மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனிடையே ஒரு கட்டத்தில் மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி இரண்டு முறை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் தனியார் காப்பகம் மூடப்பட்டது.
இதனால் மாணவி காட்பாடியில் உள்ள விடுதிக்கு மாறி வந்தார். அந்த விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் மாணவியை தேடி காட்பாடியில் உள்ள காப்பகத்திற்கு வந்தார். இதனை காட்பாடியில் உள்ள காப்பக நிர்வாகிகள் கவனித்தனர். மாணவியை தனியாக அழைத்துச் சென்று கார்த்திக் பற்றி விசாரித்தனர். அப்போது கார்த்திக் தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தாக கண்ணீருடன் மாணவி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆதரவற்ற காப்பகத்தில் வசிக்கும் சிறுமியை ஏமாற்றி பலாத்தகாரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment