பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் திடீரென்று புகழ்ந்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், அண்மையில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியிடம் படு தோல்வியை சந்தித்தது. இதே போல், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகள் மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அக்கட்சியினர் கடும் மன வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தத் தலைவருமான சசி தரூர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அபாரமான வீரியம் மற்றும் சுறுசுறுப்பு கொண்டவர். குறிப்பாக அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சில விஷயங்களைச் செய்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கண்டிப்பாக ஒரு நாள் வாக்காளர்கள் பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்வார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும் வரை உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தான் வெற்றி பெறும் என்ற தகவல் வந்தது. கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக எளிதில் வென்று விட்டது. சமாஜ்வாடி கட்சியின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வளவு பெரிய மெஜாரிட்டியில் பாஜக வெல்லும் என யாருமே உண்மையாக எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சசி தரூர் புகழ்ந்து தள்ளியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், விரைவில் பாஜகவுக்கு தாவ உள்ளாரோ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, தோல்வியை சந்தித்த பிறகு மாற்று கட்சிக்கு தாவுவது வாடிக்கையாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment