மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது திடீர்நகர். இங்குள்ள பாஸ்கரதாஸ் நகர் வடக்கு மெயின் ரோட்டில் வசித்தவர் ராமச்சந்திரன் (40) ஆட்டோ டிரைவர். இவரது மகன் சிவபிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சடையாண்டி மகள் சினேகா. இவர் தனியார் நிறுவனத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரும், சிவபிரசாந்தும் ஒரே பகுதியில் வசிப்பதால் அடிக்கடி சந்தித்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சிவபிரசாந்த் - சினேகா தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சினேகா திடீரென மாயமானார். அவரை சடையாண்டி மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் சினேகா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் நேற்று பகல் 12 மணிக்கு சினேகா தனது தந்தையிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது காதலன் சிவபிரசாந்தை பிரிய முடியாது என்றும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.
இதனால் சடையாண்டி அதிர்ச்சி அடைந்தார். மகளின் திருமணத்தை ஏற்க அவர் மறுத்தார். இதனை தொடர்ந்து காதல் ஜோடி திடீர்நகர் போலீசில் தஞ்சம் அடைந்தது. போலீசார் இருவீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
போலீஸ் நிலையம் வந்த சடையாண்டி, எனது மகள் இறந்து விட்டாள். அவளுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி சென்று விட்டார். பின்னர் ராமச்சந்திரனை அழைத்து போலீசார் பேசினர். அவர் திருமணத்தை ஏற்று கொண்டதோடு, புதுமண தம்பதிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
அதன் பிறகு அனைவரும் வீடு திரும்பி விட்டனர். நள்ளிரவு 11.45 மணி அளவில் ராமச்சந்திரன் ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு பெரியார் பேருந்து நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு சடையாண்டி ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அவர் ராமச்சந்திரனை பார்த்து, நீ எப்படி திருமணத்தை ஏற்றுக்கொள்ளலாம் என வாக்குவாதம் செய்தார்.
மேலும் நீயும், உனது மகனும் சேர்ந்து எனது மகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டீர்கள் என கூறி தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தப்பி ஓடிய சடையாண்டியை கைது செய்தனர்.
திடீர்நகர் போலீஸ் நிலையம் அருகிலேயே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment