சிம்பு கார் மோதி முதியவர் பலி: சொகுசுக் கார்களின் விபரீதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

சிம்பு கார் மோதி முதியவர் பலி: சொகுசுக் கார்களின் விபரீதம்

ஒழுங்கான சாலை வசதி இல்லாத நாட்டில் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள அதிவேக கார்களை பயன்படுத்த அனுமதிப்பது அரசுக்கு அழகா?

‘நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி’ என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18ஆம் தேதி நடந்த விபத்து இது. சாலையை கடக்க முயன்ற முதியவர் முனுசாமி என்பவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. அதோடு நிற்காமல் பறந்துவிட்டது.

படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட, அப்பகுதியினர், முதியவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் முனுசாமி இறந்தார்.

விசாரணையில், அந்தக் கார் நடிகர் சிம்புவுக்குச் சொந்தமானது என்றும், விபத்து நடந்தபோது சிம்பு, அவரது அப்பா டி.ராஜேந்தர் உள்ளிட்ட குடும்பத்தினர் காரில் இருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. தங்கள் கார் மோதி, உயிருக்குப் போராடிய முதியவரை மருத்துவமனையில் சேர்க்காமல் சென்றிருக்கிறது டி.ராஜேந்தர் – சிம்பு குடும்பம்.

சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்தின் மகள் நள்ளிரவில் கார் ஓட்டி வந்து ஆட்டோ மீது மோத, அதில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநருக்குப் பலத்த காயம்! நடிகை யஷிகா ஆனந்த், கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை வேகமாக ஓட்டி, சென்டர் மீடியனி்ல் மோதினார். காரில் வந்தவர்களுக்கு பலத்த காயம், யஷிகாவின் தோழி, சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே போல கார் விபத்து ஏற்பட்டு ஐவர் மரணம், நால்வர் மரணம் என்ற செய்திகள் கவனத்தை ஈர்க்கின்றன.

பிரபலமானவர்கள் தொடர்புள்ள அல்லது அதிகம் பேர் மரணித்த விபத்துகள் என்பதால் இவை கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இவை தவிர தினமும் இந்தியாவில் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன.

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்

ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் 53 விபத்துகள்! இவற்றில் 17 பேர் மரணமடைகின்றனர்! கணக்குப் போட்டுப் பாருங்கள். வருடத்திற்குச் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைகிறார்கள். இது ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஆதாரபூர்வமான தகவல்!
இரு வருடங்களுக்கு முன் ‘லான்செட்’ என்ற பிரபல இதழ், சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள், உலக அளவில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தகவலை வெளியிட்டது. இந்தியாவிலோ சாலை விபத்துகள் 58.7 சதவீதம் அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் விபத்துக்களில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் பாதசாரிகள் 76,729 பேர், சைக்கிள் பயணிகள் 15,324 , மோட்டர் சைக்கிள் பயணிகள் 57,802 பேர், சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
கார்களினால் ஏற்படும் சாலை விபத்துகள் அதிகம். ஆனால் அவற்றில் அதிகம் பலியாகிறவர்கள் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரவாசிகள் என்கிறது ஆய்வு. உலகின் 10இல் 1 விபத்து இந்தியாவில்தான் நடக்கிறது என ஒரு ஆய்வில் சொல்கிறது உலக வங்கி!

மதுவுக்கு இணையான போதை

விபத்துக்களுக்குக் காரணம் மது என எளிதாகப் பழிபோட்டுவிடுகிறோம். விபத்து – பலிகளுக்கான இன்னொரு முக்கிய காரணமான ‘அதிவேகம்’ குறித்து ஏனோ பலரும் பேசுவதில்லை. மது போதை காரணமாக விபத்து ஏற்படுவது 28 சதவிகிதம். அதிவேகத்தாலேயே 60 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன (இதர காரணங்கள் 12 சதவிகிதம்).
சொகுசு கார்கள்
சொகுசு கார்கள்


யஷிகா, சௌந்தர்யா, தற்போது சிம்புவின் கார். எல்லோருமே அதிவேகமாகக் காரைச் செலுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் ‘சொகுசுக் கார்கள்’. உதாரணமாக, யஷிகா செலுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ஹெரியர் எஸ்யூவி வகை கார்.

இவற்றின் வேகம் மணிக்கு இருநூறு கிலோ மீட்டர்களுக்கு மேல்! எங்கள் தயாரிப்பு கார்கள், 100 கிமீ வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டிவிடும் என வாடிக்கையாளர்களிடம் பெருமிதப்படும் கார் நிறுவனங்கள் உண்டு. ரோல்ஸ் ராய்ஸ் கார் வேகம் 300 கிமீ. சில விநாடிகளில் இது 200 கிமீ வேகத்தை எட்டிவிடும்!

இந்தியச் சாலைகளின் லட்சணம்

உலக அளவில் சாலை வசதியில் இந்தியா இரண்டாம் இடம்! பெருமைதான். ஆனால், வாகனத்தைச் செலுத்த ஏதுவாக எத்தனை கி.மீ. சாலைகள் உள்ளன என்றால் பரிதாபம்தான்!

நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், மொத்தமுள்ள சாலை தூரத்தில் இவை 1.8 சதவிகிதம்தான். மற்ற சாலைகளில் போதுமான பராமரிப்பு இல்லை. ‘சாலை வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம், சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லை’ என வரும் செய்திகளை கவனித்தாலே போதும், நமது சாலைகளின் லட்சணம் தெரிந்துவிடும்.

இதில் அதிவேக சொகுசுக் கார்கள் தேவையா?‘கார்கள் வாங்குவது அவரவர் சுதந்திரம். வசதி உள்ளவர்களுக்கான உரிமையை மதித்து அதுபோன்ற கார்களுக்கு அனுமதி அளிக்கிறோம்’ என அரசுகள் சொல்லக்கூடும்.

ஆனால் ஒழுங்கான சாலை வசதி இல்லாத நாட்டில் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள அதிவேக கார்களை பயன்படுத்த அனுமதிப்பது அரசுக்கு அழகா?

பணம் படைத்தவர்களுக்கு வாகனம் என்பது தேவை என்பதைத் தாண்டி வசதி, சொகுசு என்று ஆகிவிட்டது. ஆனால், அதிவேகத்தில்தான் அந்தச் சொகுசு இருக்கிறதா என்ற கேள்வியை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அத்தகைய வேகத்துக்கு ஏற்ற சாலை வசதிகள் மிகக் குறைவாக இருக்கும் நாட்டில் இந்தச் சொகுசு பிறரைக் கொல்வதற்கான கருவியாக மாறிவிடுகிறது.
முனுசாமிகளின் மரணங்களைப் பார்க்கும்போது, பணக்காரர்கள் அதிவேக சொகுசுக் கார்களை வாங்குகிறார்களா அல்லது பிறரைக் கொல்வதற்கான லைசன்சை வாங்குகிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.
பணம் படைத்தவர்கள் வசதியாக, சொகுசாக வாழ்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுடைய சொகுசு மற்றவர்களுக்கு உயிராபத்தாக மாறக்கூடும் என்றால் அதை அவர்கள் மறுபரிசீலனை செய்துதான் ஆக வேண்டும். குடிமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அரசாங்கமும் இத்தகைய கார்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து யோசித்துத்தான் ஆக வேண்டும்.

இல்லையேல் அதிவேக சொகுசுக் கார்களின் சக்கரங்களில் முனுசாமிகள் நசுங்கிச் சாவதைத் தடுத்து நிறுத்த முடியாமல்போகும்

No comments:

Post a Comment

Post Top Ad