கோடைக்காலம் நெருங்கி வருவதால் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர்பான நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சில நிறுவனங்களின் குளிர்பானங்கள் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியானது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இந்த நிலையில், மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் குளிர்பான நிறுவனங்களுக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.
மேலும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி 2022-ல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட ஆய்வின்போது, 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில்,634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 இலட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் குளிர்பானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006, ஒழுங்கு முறைகள்-2011 இன் படி குளிர்பான பாட்டில்கள் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறை உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட், கோடு, பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் குறித்த தகவல், ஊட்டச்சத்து குறித்த தகவல், சைவ மற்றும் அசைவ குறியீடு உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்கள் குளிர்பான நிறத்திலிருந்து மாறுபட்டு, பார்த்தவுடன் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட குளிர்பான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிர்பானங்கள் கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி நாளை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும்.
தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment