தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களை நியமித்து கடந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவர்களின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், இவர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றிய சரண்யா ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் இல்லாமல், உறுப்பினர்களை நீக்க முடியாது என்பதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தமிழக அரசின் அரசாணைக்கும், புதிய தலைவர், உறுப்பினர் தேர்வு செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment