உக்ரைனிலிருந்து மீண்டு இங்கு வந்த பிறகு பூ கொடுக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று கேட்டுள்ளார் இந்திய மாணவர் ஒருவர்.
உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் சிக்கிக் கொண்டுள்ளனர் இந்திய மாணவர்கள். 18,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் படித்து வருகிறார்கள். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னும் அங்கு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
போர் உக்கிரமாக நடந்து வரும் கார்கிவ் நகரில்தான் பெருமளவிலான மாணவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களால் அங்கிருந்து வெளியேறி வர முடியவில்லை. ரயில்கள் இல்லை, பஸ்களைப் பிடித்து எல்லைக்கு சிரமப்பட்டு வந்தாலும் கூட உக்ரைன் படையினர் நமது மாணவர்கள் வெளியேற முன்னுரிமை தருவதில்லையாம்.
இதை விட கொடுமை உக்ரைனியர்கள் காட்டும் இனவெறிக் கொடுமைதான் என்று அங்கிருந்து வருவோர் சொல்கிறார்கள். அதாவது ரயில்களில் இந்திய மாணவர்களே ஏற விடாமல் தடுக்கிறார்களாம். இந்திய மாணவர்களைத் திட்டுகிறார்களாம். இதனால் இந்திய மாணவர்கள் இனவெறிக் கொடுமை, போர் பதட்டம், இந்திய தூதரகத்திலிருந்து எந்த உதவியும் இல்லாமை என பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நாடுகளுக்கு வந்தால்தான் இந்தியத் தூதரகத்தின் உதவி கிடைக்கிறது. உக்ரைனுக்குள் ஒரு உதவியும் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்து வெளியேறி வருவது மாணவர்களின் சொந்த ரிஸ்க்கில்தான் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனிலிருந்து மீண்டு டெல்லி வந்து சேர்ந்த ஒரு மாணவர் என்டிடிவி செய்தியாளரிடம் பேசும்போது கோபத்துடன் பேசினார்.
பீகாரைச் சேர்ந்த திவ்யன்ஷு சிங் என்ற அந்த மாணவர், உக்ரைனிலிருந்து ஹங்கேரிக்குத் தப்பி வந்து அங்கிருந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளார். விமான நிலையம் வந்து சேர்ந்த அவர் உள்ளிட்ட மாணவர்களுக்கு ரோஜாப் பூ கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர்.
அந்த ரோஜாப் பூவைக் கையில் வைத்துக் கொண்டு செய்தியாளரிடம் அவர் பேுசகையில், ஹங்கேரிக்கு வந்த பிறகுதான் எங்களுக்கு உதவிகள் கிடைத்தன. அதற்கு முன்பு வரை எங்களது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இள்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் எல்லை கடந்து வந்தோம். நாங்களாகத்தான் வந்தோம். பத்து பேர் சேர்ந்து ரயிலைப் பிடித்து கடும் சிரமத்திற்கு மத்தியில் எல்லை கடந்து வந்தோம். அந்த ரயிலில் உட்காரக் கூட இடம் இல்லை.
உள்ளூர் மக்கள் எங்களுக்கு உதவினர். யாரும் தவறாக நடக்கவில்லை. ஆனால் போலந்து எல்லைப் பகுதியில் சில மாணவர்களுக்கு உக்ரைன் படையினரால் துன்புறுத்தல் ஏற்பட்டது உண்மைதான். நமது அரசுதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி நட்நதிருக்காது. நாங்களும் இத்தனை பிரச்சினைகளை சந்தித்திருக்க மாட்டோம். அமெரிக்காதான் தனது நாட்டு குடிமக்களை முதலில் உக்ரைனிலிருந்து பத்திரமாக மீட்டது. நாம் மிகவும் தாமதம் செய்து விட்டோம்.
இங்கு வந்து இறங்கியவுடன் பூ தருகின்றனர். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் யார் பொறுப்பேற்றிருப்பார்கள். இங்கு வந்து சேர்ந்த பின்னர் பூ கொடுப்பதைத் தவிருங்கள். அதற்குப் பதில் போர்க்களத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்க திட்டமிட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment