மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் சிலர் பேசுவதும், அவரைச் சென்று சந்திப்பதும் அடிக்கடி சந்திப்பதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சசிகலாவை சந்திப்பவர்கள் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்ட அதிமுக சசிகலாவையும், அமமுகவையும் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
அதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் தொண்டர்களே அமமுகவில் எஜமானர்கள் அவர்களது முடிவின் படியே பயணிப்போம் என கூறினார். அதிமுக உட்கட்சிப் பிரச்சினை வெடித்து வரும் நிலையில் தினகரனோ தனது வழக்கமான அரசியலை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இன்று கருத்து தெரிவித்தார்.
இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, தற்போது அந்தக் கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?
எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல திமுக அரசு நாடகமாடக்கூடாது.
புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment