கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சார்ந்தவர் வினீஷ் (22). பட்டதாரியான இவர் தற்போது நடைக்காவு பகுதியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல, வைக்கல்லூர் பகுதியை சார்ந்தவர் சினேகா (22). இவர் கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான அயிரை என்னுமிடத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில், அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவி மாயமாகியுள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகம் பொழியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. அதனடிப்படையில் பொழியூர் போலீசார் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மாயமான மாணவி சினேகா சுவாமியார்மடத்தில உள்ள ஒரு கோயிலில் வினீஷை இந்து முறைப்படி திருமணம் செய்து விட்டு குளச்சல் பீச்ரோடு பகுதியை சார்ந்த வழக்கறிஞர் மரிய ஜலால் (38) என்பவரை சந்தித்து அவருடன் பொழியூர் காவல் நிலையம் செல்ல வந்துள்ளனர்.
இதனையடுத்து, நித்திரவிளை சந்திப்பில் வைத்து வழக்கறிஞர் வந்த காரை வழிமறித்த கும்பல் ஒன்று காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக வழக்கறிஞர் காரிலிருந்து இறக்கி மற்றொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தனது காரில் இருந்த கிளைன்ட்ஸ்களை ரவுடி கும்பல் பறித்து சென்றதில் அதிர்ச்சிக்குள்ளான வழக்கறிஞர் காதல் ஜோடியை ஏற்றி சென்ற காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் வழக்கறிஞர் சென்ற காரை, இரண்டு பைக் மற்றும் ஒரு காரில் பின்தொடர்ந்து மிரட்டிய வண்ணம் சென்றுள்ளனர். பயந்து போன வழக்கறிஞர் கொல்லங்கோட்டிலிருந்து வள்ளவிளை வழியாக காரை திருப்பி நித்திரவிளை காவல் நிலையம் நோக்கி சென்றார். நித்திரவிளை சந்திப்பில் வைத்து வழக்கறிஞர் காரை ரவுடி கும்பல் மீண்டும் வழிமறித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, காரின் முன்பகுதியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் நிலை குலைந்து போன வழக்கறிஞர் தன்னை காப்பாற்றி செல்லுமாறு நித்திரவிளை போலீசாரிடம் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். சம்பவ இடம் வந்த போலீசார் வழக்கறிஞரை காருடன் மீட்டு நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக வழக்கறிஞர் மரிய ஜலால் (38) கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் குமார் என்ற பிரசன்ன குமார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளையும் இரண்டு பைக் மற்றும் ஒரு சொகுசு காரையும் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட காதல் ஜோடி என்ன ஆனார்கள் என்பதும் கைது சம்பவத்துக்கு பின்னரே தெரிய வரும்.
No comments:
Post a Comment