வாடகை பாக்கி செலுத்தாத தி மயிலாப்பூர் கிளப்: நீதிமன்றம் புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 4, 2022

வாடகை பாக்கி செலுத்தாத தி மயிலாப்பூர் கிளப்: நீதிமன்றம் புதிய உத்தரவு!

தி மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மயிலாப்பூர் கிளப்புக்கு 2016ம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென கூறி , மயிலாப்பூர் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிளப் தரப்பில், 116 ஆண்டுகள் கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்து கிளப் நடத்தி வருவதாகவும், வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அறநிலைய துறை தரப்பில், 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும், அதை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதால், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலத்துக்கான வாடகையை மீண்டும் நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்க கிளப்புக்கு உத்தரவிட்டனர்.

அந்த விண்ணப்பத்தின் மீது 2 மாதங்களில் வாடகை மறு நிர்ணய நடைமுறையை முடிக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வாடகை பாக்கியை செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் எனவும், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad