நடிகர் ரஜினி போட்ட திடீர் போன் காலை சற்றும் எதிர்பாராத ரசிகர் மனைவி கதறி அழுதார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன.
விசிக தமிழக அரசியலில் செய்த வினோதம்? - திருமாவளவன் பேச்சு
ரஜினிக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய பெயருக்கும், பெருமைக்கும் சொந்தக்காரர் மதுரை முத்துமணி. ரசிகர் மன்றத்தின் பெயரில் தனது சொந்த செலவில் பல்வேறு நற்பணிகளை செய்து ரஜினியின் மனதில் நீங்காத இடத்தை மதுரை முத்துமணி பிடித்தார்.
இதன் பலனாக கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி சென்னையில் நடிகர் ரஜினி வீட்டு பூஜை அறையில் முத்துமணிக்கு திருமணம் நடந்தது. நடிகர் ரஜினியே தனது கையால் தாலியை எடுத்து கொடுக்க வேண்டும் என முத்துமணி விரும்பியதால், அதை நிறைவேற்றி அழகு பார்த்தவர் ரஜினி.
அந்த அளவிற்கு ரஜினியிடம் முத்துமணிக்கு செல்வாக்கு இருந்தது. சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த முத்துமணி கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிந்ததும் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் முத்துமணியிடம் பேசி நலம் விசாரித்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முத்துமணி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு பணமின்றி தவித்தார்.
இதுகுறித்து தெரிய வந்ததும் முத்துமணியை சென்னைக்கு வரவழைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து தேவையான சிகிச்சைகள் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்தார்.
இந்நிலையில் மீண்டும் முத்துமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துமணி மறைவுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சுதாகர் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முத்துமணி மனைவி லட்சுமியை செல்போன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் பின்வருமாறு:
லட்சுமி: வணக்கம் சார்.
ரஜினி: வணக்கம் அம்மா. மன்னிக்க வேண்டும். நான் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் உள்ளேன்.
லட்சுமி: என்ன ஆச்சு சார்?
ரஜினி: கடந்த 2 நாட்களாக கடுமையான இருமல், காய்ச்சலா இருக்கு.
லட்சுமி: உடம்பு சரியில்லாமல் இருந்த எனது கணவர் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வந்தார். ஆனாலும் இப்படி இறந்து போவார் என, நான் நினைக்கவில்லை. (கதறி அழுகிறார்)
ரஜினி: ஒன்னும் கவலைப்படாதீங்க.
லட்சுமி: எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கடந்த பிறகு தான் பெண் குழந்தை பிறந்தது. அவள் தற்போது 10ம் வகுப்பு படிக்கிறாள். அவளின் திருமணத்தை பார்க்க முடியாமல் போய்ட்டாரேன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு சார்.
ரஜினி: அதை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நடக்குறது எல்லாமே நல்லா தான் நடக்கும்.
லட்சுமி: சரிங்க சார்.
ரஜினி: நீங்க, சென்னை வரும்போது என்னை வந்து பாருங்க. கவலைப்பட வேண்டாம். இவ்வாறு மறைந்த ரசிகர் முத்துமணி மனைவியுடன் நடிகர் ரஜினி மொபைல் மூலம் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முத்துமணி இறந்தபோது ரஜினி நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. இதனால் ரஜினி குறித்து பல்வேறு விமர்சனங்கள் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் வைக்கப்பட்டது.
தற்போது மறைந்த ரசிகர் மனைவிக்கு ரஜினியே போன் போட்டு உடல் நிலை சரியில்லை என கூறியதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment