சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது சிரிப்பலையை எற்படுத்தியது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எல்லோரும் பேசுகிறபோது, தளபதி வீட்டுத் திருமணம், நம்முடைய வீட்டுத் திருமணம் என்று அவர்களுக்குரிய வகையில் தம்முடைய வாழ்த்துரையை சொல்லுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது கழகக் குடும்பத்தின் திருமணம். அதே நேரத்தில் ஒரு பாரம்பரியத்தை பெற்றிருக்கும் ஒரு குடும்பத்தில் நடைபெறும் திருமணம்.” என்றார்.
“டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தந்தை - என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள். தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வர கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பனராக ராஜரத்தினம் பிள்ளை விளங்கியிருக்கிறார்.” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்னொரு செய்தியும் சொல்லியாக வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு. அந்த மாநாட்டிற்கு ஜவகர்லால் நேரு வந்திருக்கிறார்கள். அந்த மாநாட்டையொட்டி ஊர்வலம் ஒன்று நடைபெறுகிறது. முதல் நாள் தலைவர்களை எல்லாம் வரவேற்று அந்த ஊர்வலம் நடக்கிறது, பேரணி நடக்கிறது. அந்த ஊர்வலம் நடைபெறுவதற்கு முன் வரிசையில் நின்று அங்கு நாதஸ்வரம் வாசித்தவர்தான் நம்முடைய பெருமைக்குரிய ராஜரத்தினம் பிள்ளை. தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களை சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை.
இன்னொன்று, அவருடைய ஸ்பெஷலட்டி என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாதஸ்வர கலைஞர்களில் முதல்முறையாக 'கிராப்' வைத்துக் கொண்டவரும் அவர்தான். அது மட்டுமல்ல, முதல் முறையாக 'கோட்' போட்டுக் கொண்டு, 'ஷெர்வாணி' ஆடைகளை அணிந்து விட்டு வந்தவரும் நம்முடைய ராஜரத்தினம் பிள்ளைதான் அவர்கள். இத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டு மட்டுமல்ல, காலில் 'ஷூ'-வும் போட்டுக் கொண்டிருப்பார். இன்று டி.என்.ஆர் அவர்களுடைய கொள்ளுப் பெயரன் கருணா ரத்தினத்திற்கும் - செல்வி காவ்யாவுக்கும் என்னுடைய தலைமையில் இந்த திருமணவிழா நடந்தது என்றால் கழகத்தின்பால் இந்தக் குடும்பத்திற்கு ஒரு நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கே நன்றியுரை ஆற்றிய டாக்டர் ராஜமூர்த்தி அவர்கள் பேசியபோது குறிப்பிட்டுச் சொன்னார். இவருக்கு எவ்வாறு இந்தப் பெயர் கிடைத்தது என்று.
கருணாரத்தினம், இந்த கருணா பிறந்தவுடன் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும், என்னுடைய மனைவி துர்காவும் குழந்தையாக இருந்த கருணாவை கொண்டு சென்று தலைவர் கையில் கொடுத்துப் பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் 'கருணாரத்தினம்' என்று பெயர் வைத்தார்கள். இதைக்கேட்டதும் சிலருக்கு இவ்வாறு ஒரு பெயர் வைத்து விட்டாரே, இதற்கு என்ன பொருள் என்று யாருக்கும் புரியவில்லை. அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக அபுதாபிக்கு சென்றார். அபுதாபி சென்று, ஒரு வருடம் - இரண்டு வருடம் வேலை பார்த்திருப்பார். அதற்குப் பிறகு, என்னால் அங்கு இருக்க முடியாது, எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது, நான் அம்மாவை பார்க்க வேண்டும், அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைவிட நான் என்னுடைய அண்ணன் உதயநிதியைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவர்தான் நம்முடைய கருணா.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்குக் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர். எனவே மணமகள் காவ்யா கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்து நிச்சயமாக வாழ்க்கையை நடத்துவார். அதற்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.” இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment