கொரோனாவை வெ(கொ)ன்ற புதுச்சேரி... பூஜ்ஜியம் பாதிப்பால் மக்கள் குஷி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 7, 2022

கொரோனாவை வெ(கொ)ன்ற புதுச்சேரி... பூஜ்ஜியம் பாதிப்பால் மக்கள் குஷி!

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாததால் கொரோனா வைரஸை வென்ற முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 157 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாததால் சுகாதாரத்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவையை பொறுத்தவரையில் 2020 மார்ச் 17-ம் தேதி மாஹேவில் உள்ள 68 வயது பெண் ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 22 லட்சத்து 20 ஆயிரத்து 570 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,65,745 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,63,755 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பான ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிறு சிறு கட்டுப்பாடுகள், தடுப்பூசி முகாம்கள் என அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டியது.

தடுப்பூசியை பொறுத்தவரையில் முதல் தவணையை 9,32,278 பேரும், இரண்டு தவணைகளையும் 6,52,024 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி 12,649 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரையில் சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாநிலம் என்பதால் கொரோனாவை ஒழிப்பது பெரும் சவாலாக இருந்தது. அரசின் தொடர் முயற்சியின் காரணமாக தற்போது புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்துள்ளதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 28 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad