உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஒன்றிய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்றவர்கள் பெரும்பாலும் மாணவர்களே. அவர்கள் மருத்துவப் படிப்புக்காகவே உக்ரைன் சென்றுள்ளனர். இந்தியாவில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் உக்ரைனை மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கின்றனர்.
தற்போது போர் தீவிரமாகி வரும் நிலையில் மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த மாணவர்களின் கல்வி பாதியிலேயே நின்று போயுள்ளது. உக்ரைனில் எப்போது நிலைமை சீரடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளிலேயே தொடர்ந்திட பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “உக்ரைனின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான மருத்துவ மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனில் உள்ள அவர்களின் பல்கலைக்கழகங்களில் போர் நிறுத்தம் மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்கும் வரை அவர்களின் படிப்பில் ஏற்படும் இடையூறு தொடரும்.
உக்ரேனின் இந்த நெருக்கடியானது, ஏற்கனவே போர் மண்டலத்தில் இருக்கும் அதிர்ச்சியை அனுபவித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் சக்தி கொண்டுள்ளது.
மாணவர்களின் படிப்பு போர் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அவர்களின் படிப்பைத் தொடர வசதி செய்யவும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.
இது தொடர்பாக ஒடிசா மாநில அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும்” என்று கூறியுள்ளார்.
நவீன் பட்நாயக் பிரதமருக்கு எழுதியுள்ள இந்த கடிதம் மாணவர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. உயிர் தப்பி வந்த மாணவர்கள் தங்களது படிப்பு குறித்து பேரச்சம் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் கடிதம் அமைந்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க எம்பிக்கள் குழுவை அனுப்ப தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். அது தேசிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது ஒடிசா முதல்வரின் இந்த கோரிக்கை கவனம் பெற்று வருகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
No comments:
Post a Comment