அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை என, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தெரிவித்து உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சொந்த வார்டுகளிலேயே, அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவில், மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. தலைமை இல்லாததாலேயே தேர்தலில் தோல்வி அடைந்ததாக அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்திருந்த வி.கே.சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை ஓ.ராஜா சந்தித்து பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று, சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு ஓ.ராஜா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தான். இவர்கள் இருவரும் கட்சியில் இருந்தால் அதிமுக காணாமல் போய்விடும். இதற்காகத் தான், அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி, சசிகலாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
திமுகவை சீண்டிய அண்ணாமலை - டென்ஷனான மு.க.ஸ்டாலின்!
என்னை கட்சியில் இருந்து அவர்கள் நீக்கியது செல்லாது. என்னை நீக்குவதற்கு அவர்கள் யார்? எங்களை பொறுத்தவரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான். எனது விருப்பப்படியே சசிகலாவை சந்தித்தேன். சசிகலா தலைமையில் தான் செயல்படுவோம். அதற்கு தான் அவர்களை சந்தித்தோம். இனி எல்லாமே அவர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment