மதுராந்தகத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே இந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (32) வைத்தீஸ்வரி (25) தம்பதி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், குழந்தை இல்லை. இதன் காரணமாக தம்பதிக்குள் அவ்வப்போது சண்டை இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
வைத்தீஸ்வரியும் அடிக்கடி இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வைத்தீஸ்வரி வீட்டின் மேல் உள்ள கூரை கொட்டகையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் வைத்தீஸ்வரி சடலம் கிடப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.
உடனே, சம்பவம் குறித்து அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் செல்லவே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பின்பு சிலம்பரசன் மாயமானதால் சந்தேகமடைந்த உறவினர்கள் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அத்துடன், சிலம்பரசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த போலீசார் தலைமறைவான வைத்தீஸ்வரியின் கணவர் சிலம்பரசனை தேடி வருகின்றனர். மேலும், குழந்தை இல்லாத விரக்தியில் வைத்தீஸ்வரி தற்கொலை செய்துகொண்டாரா? சிலம்பரசன் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளாரா? தற்கொலைக்கு தூண்டினாரா என பல கோணங்களில் விசாரணையும் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment