நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
உக்ரைன் மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசின் எந்த ஓர் உறுப்பு நாட்டையும் இணைக்க முற்படக்கூடாது. இதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்துள்ளது என்று ரஷ்யா தெளிவுபடுத்தியது. சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மேற்கண்ட நாடுகளை நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்பதில் ரஷ்யா தெளிவாக உள்ளது.
எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை. அதேசமயம், உக்ரைனும் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதனிடையே, எல்லையில் படைகளை குவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நேட்டோ பிரச்சினையே இருக்கிறது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேசமயம், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்றன. ஆனால், அதில் எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும், அதனை மீறி தாக்குதல் தொடர்வாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், மக்களை வெளியேற விடாமல் தடுக்க உக்ரைன் அரசே இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதாக ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுக்கான நேட்டோ உறுப்புரிமைக்கு இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போராடாது; ஆனால், நாங்கள் கடைசி வரை போராடப் போகிறோம்; எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை சமாதானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு வெளிப்படையான விஷயத்தையும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். படையெடுப்பை கட்டவிழ்த்துவிடுவதற்கு சற்று முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் சுதந்திரமாக அங்கீகரித்த உக்ரைனின் இரண்டு ரஷ்ய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து "சமரசம்" செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment