மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் தொடர இந்திய மருத்துவக் கழகம் உரிய அனுமதியளிக்க வேண்டும்.
நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிகக் கல்விக் கட்டணம் காரணமாகவும், இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவம் படித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் தற்போதைய கடும்போர் காரணமாகத் தாயகம் திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மிக ஆபத்தான போர் தாக்குதல்களிலிருந்து ஊன், உறக்கமின்றி, மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மாணவச் செல்வங்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்வியை மீண்டும் தொடர முடியுமா? என்ற ஐயத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தற்போதைய சூழலில் ரஷ்ய – உக்ரைன் போர் விரைவில் முடிவுற்றாலும், எதிர்காலத்தில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் மூளக்கூடிய பதட்டமான அரசியல் சூழலே நிலவுவதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பத் தயங்குகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், தாயகம் திரும்புவதற்காக மாணவ, மாணவியர் பெரும் பண இழப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment