ஜோதிடக் கொலைகள்! கருணாநிதியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா ஸ்டாலின்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

ஜோதிடக் கொலைகள்! கருணாநிதியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?

ஜோதிடம் என்பது அறிவியல் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். சில பல்கலையில் ஜோதிடம் ஒரு பாடமாகவே இருக்கிறது. ‘ஜோதிடம் அறிவியல்பூர்வமானது அல்ல’ என்போரும் உண்டு. ஆனால் அவர்களில் பலரும்கூட, ‘இது சிரமத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது’ என்று நேர்மறையாகச் சொல்வதும் உண்டு.

ஜோதிடம் என்பது அறிவியல் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். சில பல்கலையில் ஜோதிடம் ஒரு பாடமாகவே இருக்கிறது. ‘ஜோதிடம் அறிவியல்பூர்வமானது அல்ல’ என்போரும் உண்டு. ஆனால் அவர்களில் பலரும்கூட, ‘இது சிரமத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது’ என்று நேர்மறையாகச் சொல்வதும் உண்டு.

ஆனால் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள், அப்படி நேர்மறையாக இல்லை.

சம்பவம் 1

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. வயது 29. அவரது மனைவி காயத்ரி. வயது 25
ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் மூன்று மாத ஆண்குழந்தையும் இருக்கிறார்கள்.
ஆட்டோ ஓட்டுநரான ராம்கி, மிகுந்த ஜோதிட நம்பிக்கை உள்ளவர். தினமும் எந்த திசையில் முதன் முதலில் ஆட்டோவை செலுத்த வேண்டும், எந்தப் பகுதியில் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதையெல்லாம்கூட ஜோதிடர்களைக் கேட்டுத்தான் முடிவெடுப்பார்.
ஜோதிடர் ஒருவர், “உன் மூத்த மகன் உன்னுடன் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மிகவும் சிரமப்படுவாய்” என்று திருவாய் அருளியிருக்கிறார்.

இதை நம்பிய ராம்கி, மூத்த மகனை வெளியூர் ஹாஸ்டலில் சேர்க்க முயன்றுள்ளார். “ஐந்து வயது குழந்தையை ஹாஸ்டலில் சேர்ப்பதா” என மனைவி காயத்ரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை மூண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த ராம்கி, மூத்த மகன் மீது மண்ணெண்ணைய் ஊற்றிக் கொளுத்திவிட்டார்.
மகன் அலறித் துடிக்க, காயத்ரியும் கதற, அக்கம்பக்கம் இருந்தவர்கள் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது அந்தக் குழந்தை.

சம்பவம் 2

கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, கணவர் இறந்துவிட்டார். மகன் திருமணமாகித் தனிக்குடித்தனம் போய்விட்டார். மகள் சுகன்யா, மனநலம் பாதிக்கப்பட்டவர்.
ஜோதிடர் ஒருவர் தனலட்சுமியிடம், “இன்னும் சில நாட்களில் உனக்கு உடல் நலம் பாதிக்கும். உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று கூறியிருக்கிறார். மகனும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான்; தானும் இறந்துவிட்டால், மனநலம் குன்றிய மகளை யார் கவனிப்பார்கள் என்று நினைத்து தனலட்சுமி மனம் வருந்தியபடி இருந்திருக்கிறார்.

மறுநாள் காலை அவர்களது வீடு வெகுநேரம் திறக்கப்படவில்லை. மகனுக்கு தகவல் தெரிவிக்க, அவர் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார். தனலட்சுமி தூக்கில் பிணமாகத் தொங்க, மகள் வாயில் நுரைதள்ளியபடி உயிரற்றுத் தரையில் கிடந்திருக்கிறார்.

ஆம்... பெற்ற மகளுககு விஷம் கொடுத்து அவர் துள்ளத் துடிக்க மரணத்தை நோக்கிச் செல்வதைப் பார்த்தபடியே இருந்த தனலட்சுமி, பிறகு தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சம்பவம் 3

ஆந்திராவில் சித்தூரில் வாழ்ந்தவர்கள் புருஷோத்தமன் - பத்மஜா தம்பதி. புருஷோத்தமன் பல்கலை பேராசிரியர். இவர்களுக்கு 27 வயதான அலேக்யா, 22 வயதான திவ்யா என இரு மகள்கள்.
ஜோதிடர் சொன்னார் என்று, மூத்த மகள் அலேக்யாவை உடற்பயிற்சிக் கருவியால் அடித்தும், இளை மகள் திவ்யாவைத் திரிசூலம் கொண்டு குத்தியும் கொன்றுவிட்டனர் இந்தத் தம்பதியர்.
ஜோதிடர் சொன்னார் என்று யாரோ ஒரு குழந்தையை நரபலி கொடுத்தனர் என்னும் செய்திகள் நீண்ட காலமாகவே வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவே பெருங்குற்றம். இப்போது பெற்ற பிள்ளைகளையே கொல்லும் அளவுக்கு ஜோதிட நம்பிக்கை போயிருக்கிறது.

கேரளம் காட்டும் வழி

2019ஆம் ஆண்டு கேரள மாநில அரசு, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் எனத் திட்டமிட்டது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வரைவு மசோதாவை கேரள சட்ட சீர்திருத்தக் குழு மாநில அரசிடம் வழங்கியது. இதில், மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, பேய் ஓட்டுவது என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிப்பது, மாதவிடாய் காலத்திலும், மகப்பேறுக்குப் பிந்தைய காலத்திலும் பெண்களைக் கட்ய்டாயத் தனிமைக்குள் தள்ளுவது உள்ளிட்டவற்றுக்குக் கடும் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
மூடநம்பிக்கைகளால் மக்கள் ஏமாறாமல் இருக்கப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வரைவு மசோதா பரிந்துரைத்துள்ளது.

கேரளம் மட்டுமல்ல; மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை மகாராஷ்டிர அரசு 2013ஆம் ஆண்டும், கர்நாடக அரசு 2017ஆம் ஆண்டும் நிறைவேற்றியுள்ளன.

கருணாநிதியின் விருப்பம்

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் குறித்த பேச்சு 2013 வாக்கிலேயே அடிபட்டது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, “மூட நம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார். அது மட்டுமல்ல, “தமிழ்நாட்டிலாவது இந்த சட்டம் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்” என்றார். இச்சட்டத்தின் தேவையை தனது நீண்ட அறிக்க மூலம் விளக்கினார்.
தன் தந்தையின் இந்தக் கனவை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?

சமீபத்தில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘என் தந்தையின் வாழ்க்கை வேறு, எனது வாழ்க்கை வேறு அல்ல. அவர்தான் நான்’ என்ற கருத்தில் குறிப்பிட்டிருக்கிறார். திராவிடக் கருத்தியலுக்கு உட்பட்டு, பகுத்தறிவு ஆட்சி நடக்கும் என்றும் உறுதிபடச் சொல்லி இருக்கிறார்.

எனவே, கருணாநிதியின் ஆசையான, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை ஸ்டாலின் கொண்டுவர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

No comments:

Post a Comment

Post Top Ad