உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல், மாணவர்கள் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு சார்பில் இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1456 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களின் பெரும்பாலானவர்கள் மாணவர்களே. அதிலும், குறிப்பாக அவர்கள் அனைவரும் மருத்துவம் படிக்க சென்றவர்கள். தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால், அவர்களால் உக்ரைனுக்கு மீண்டும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களது கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், “தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் நமது தமிழக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களது இச்சூழ்நிலையை கருத்திற் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியாளர்களை கலந்து பேசி நமது மாணவச்செல்வங்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment