பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார். பரோல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 32 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த தமிழக ஆளுநர், எழுவரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் அறிக்கை அளித்தார்.

அதேசமயம், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இதனிடையே, கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் உள்ளார். இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் இறுதி முடிவெடுக்க தாமதமாகும் என்பதால், பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது.

“பரோலில் இருந்தாலும் கூட அவரால் வெளியே செல்ல முடியவில்லை, யாரையும் பார்க்க முடியவில்லை, வீட்டுச்சிறை போல இருக்கிறார். எனவே பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என பேரறிவாளன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

“பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசு தலைவர் அதிகாரம்” என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

“ஆனால் நீங்கள் இதில் மிகவும் தாமதம் செய்கிறீர்களே? சம்மந்தப்பட்ட நபர் (பேரறிவாளன்) 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளாரே” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு ஒன்றிய அரசு தரப்பில், “ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளனை விடுவிப்பது ஆளுநரின் முடிவுக்கு உட்பட்டது கூட கிடையாது. குடியரசு தலைவர் மட்டும் தான் முடிவு செய்யப்படும். பேரறிவாளன் தனக்கான வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தி விட்டார். இரண்டாவது வாய்ப்பு கிடையாது” என தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad