பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கைக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறை, கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் விளைவாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் உணவு, பெட்ரோல், டீசல், மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு கடும் தட்டுப்ாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உலக நாடுகளின் உதவியை இலங்கை நாடி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி பெறுவதை இறுதி செய்வதற்காக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இநதியா வந்துள்ளார்.
அவரது இரண்டு நாள் பயணத்தின் முக்கிய அம்சமாக எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை (7,500 கோடி ரூபாய்) இந்தியாவிடம் கடனுதவி பெறுவது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் பசில் ராஜபக்சே இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " அண்மை நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது.
இதனடிப்படையில் அத்தியாசியப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள வசதியாக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி அளிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கைக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்" என்று தமது ட்விட்டர் பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
No comments:
Post a Comment