கல்யாண் ஜூவலர்ஸ் சேர்மனாக வினோத் ராய் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அழுத்தம் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தனிப்பட்ட நிர்வாக அதிகாரமில்லாத இயக்குனராக முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரான வினோத் ராயை நியமிக்க கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனராகத் தொடர்ந்து டி.எஸ். கல்யாணராமன் இயங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வினோத் ராய், ஐக்கிய நாடுகள் சபையின் வெளிப்புற தணிக்கையாளர் குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
இந்த நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சேர்மனாக வினோத் ராயை நியமிக்க அந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. கல்யான் ஜூவல்லர்ஸுடன் இணைவது தனது கிடைக்க பாக்கியம் எனவும், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரான வினோத் ராயை இதுபோன்ற பதவிகளில் நியமிப்பதற்கு சில சட்ட சிக்கல்களும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னாள் வருவாய் செயலாளரான ஒருவர் தனது பணிக்காலம் முடிந்து 4 ஆண்டுகளுக்குள் தனியார் நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் அமர்வதற்கு முறையான அனுமதியை பெற வேண்டும். இதற்கான அனுமதியை அவர்கள் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் பெற வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவரது பணி காலத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு சாதகமாக அவர் செயல்பட்டுள்ளாரா என்று பார்ப்பர். அதன் பிறகு தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அரசு நிர்வாகத்தை எதிர்காலத்தில் செயல்பட முயற்சிக்க மாட்டேன் என்று எழுதித்தர வேண்டும் என்பது நடைமுறை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எனவே, இது தொடர்பான அனுமதியை கோரி கல்யாண் ஜூவலர்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில், கல்யாண் ஜூவலர்ஸ் சேர்மனாக வினோத் ராய் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அழுத்தம் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிக் குறைவான உரிமக் கட்டணத்துக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பியவர் வினோத் ராய்.
இந்த 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அப்போதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, எம்.பி.கனிமொழி ஆகியோர் சிக்கினர். மேலும் பலருக்கும் இதில் தொடர்புடையதாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு திமுகவுக்கும், கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பின்னர் வெகு காலம் வழக்கு நடைபெற்று ஆ.ராசா தன்னை குற்றமற்றவர் என்று தனி ஆளாக வாதாடி விடுதலையானார்.
இதுஒருபுறமிருக்க, 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் வினோத் ராய். இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014ஆம் ஆண்டு தேர்தலில் படு தோல்வி அடைந்து ஆட்சியை இழக்க காரணமாக அமைந்த குற்றச்சாட்டுகளில் இந்த 2ஜி அலைக்கற்றை மோசடிக் குற்றச்சாட்டு முக்கியமானது. 2ஜி வழக்கு தொடர்பாக செய்தித்தாள்களில் 1.76க்கு அருகில் போடப்பட்ட பூஜியங்கள் கிராமங்கள் வரை பேசுபொருளாக மாறி, திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியதுடன் அடுத்த 10 ஆண்டுகள் அரியணையை அக்கட்சி பிடிக்க விடாமலும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment