பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவன் தீக்சித் பள்ளி வேனில் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்து இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் வேனில் தான் கொண்டுவந்த பொருளை விட்டுச்சென்றதால், மீண்டும் வேன் அருகே வந்துள்ளார். இதனை அறியாத வேன் ஓட்டுநர் பூங்காவனம், வேனை பின்புறமாக இயக்கியபோது மாணவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் தீக்சித் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment